இந்திய சந்தையில் பண்டிகை கால விற்பனை குறித்து சாம்சங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் பண்டிகை காலத்தை ஒட்டி அசத்தல் சலுகைகளை அறிவித்து இருந்தன.
சாம்சங் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத இடைவெளியில் மட்டும் ரூ. 14 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 2022 ஆண்டின் முதல் மூன்று காலாண்டில் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் 99 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
வருடாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, ஜனவரி முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சாம்சங் நிறுவன 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை 178 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு விற்பனை இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.
“சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு பண்டிகை காலம் சிறப்பாக அமைந்து இருக்கிறது. செப்டம்பர் 1 துவங்கிய 60 நாட்களில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 14 ஆயிரத்து 400 கோடி வருவாய் கிடைத்துள்ளது,” என சாம்சங் இந்திய மூத்த இயக்குனர் மற்றும் விளம்பர பிரிவு தலைவர் ஆதித்யா பாபர் தெரிவித்துள்ளார்.
இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் பெருமளவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாம்சங் ஃபைனான்ஸ் பிளஸ் சேவை காரணமாக இந்த அளவுக்கு விற்பனை நடைபெற்று இருக்கிறது என்றும், பண்டிகை காலத்தில் மட்டும் இந்த தளத்தில் பரிவர்த்தனைகள் 10 லட்சத்தை கடந்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“கேலக்ஸி S22 மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களால் இந்திய சந்தையில் வேகமாக வளரும் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டு என்ற பெருமையை சாம்சங் பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ரூ. 30 ஆயிரம் மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் விற்பனை 99 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது,” என்று பாபர் தெரிவித்து இருக்கிறார்.