பஞ்ச பூத தலங்களுள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலும் ஒன்று. பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்த கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமுலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி.1053-ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி.1230-ம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி. 1320-ம் ஆண்டு வள்ளால மகாராஜாவும் கட்டியுள்ளனர்.
மேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை. பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகரத்தார்களினால் இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டது.
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சி தருகிறது. மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை.
இப்படி சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் உண்டாகின்றன. அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய முயன்ற போது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த திருவண்ணாமலை. மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும் இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம். இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி தரும் தலமாகும்.