யுத்தம் நிறைவடைந்து ஏழு வருடங்கள் கடந்துள்ள போதிலும் மக்களின் காணிகளை இராணுவம் கையப்படுத்திக்கொண்டு மக்களை உள்நுழைய விடாமல் தடுத்து வருகின்ற நிலையில், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மனித நேயம் உள்ளவர்களும் உலக நாடுகளில் மனித உரிமையை மதிப்பவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 16 நாட்களாக வீதியில் இரவு பகலாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்று சந்தித்த சிறிதரன் அதன் பின்னர் ஊடகங்களிடம் இவ்வாறு குறிப்பிட்டார்.
காணி விடுவிப்பு தொடர்பாக குறித்த இடத்திலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பை ஏற்படுத்திய சிறிதரன், மக்களின் நிலை குறித்து தெளிவுபடுத்தினார். இதன்போது, தான் ஏற்கனவே பாதுபாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியபோதும் அவரது பேச்சில் திருப்தியில்லையென்றும் ஆகவே ஜனாதிபதியுடன் பேசி இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் சம்பந்தன் கூறியதாக சிறிதரன் குறிப்பிட்டார்.
மக்களது காணிகளில் பாதைகளை அமைத்து பாரிய விடுதிகளை ராணுவம் அமைத்துள்ளதாக தெரிவித்த சிறிதரன், ராணுவ முகாமுக்கு அருகில் அவர்களே பயன்படுத்தாமல் பல காணிகள் காடுகளாக காணப்படுன்றதெனவும் அவற்றை தூரத்தே நின்று பார்த்து மக்கள் கண்ணீர் வடிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மக்களை ஏமாற்றும் வகையில் கேப்பாப்பிலவு, சீனியாமோட்டை ஆகிய பகுதிகளில் எவ்வித அடித்தளமும் இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவம் வீடுகளை அமைத்து கொடுத்ததாகவும் இன்றும் ராணுவத்தின் வலைப்பின்னலுக்குள் காணப்படும் முகாம் போலவே அப்பிரதேசங்கள் காணப்படுவதாகவும் சிறிதரன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், தமது தாய்மண்ணில் இம் மக்கள் வாழ்வதற்கான ஏற்பாடுகளை காலம் தாழ்த்தாது ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அனைவரதும் தார்மீக கடமையென சிறிதரன் மேலும் தெரிவித்தார்.