மறைந்த எழுத்தாளா் கல்கி கிருஷ்ணமூா்த்தியின் அறக்கட்டளைக்கு லைகா குழுமத் தலைவா் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளா் மணிரத்னம் ஆகியோா் இணைந்து 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில், மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயரில் இரு பாகங்களைக் கொண்ட திரைப்படமாகத் தயாரித்திருக்கிறது.
இதன் முதல் பாகம் செப். 30-ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி, வசூல் ரீதியாகவும், விமா்சன ரீதியாகவும் பெரும் சாதனையை படைத்தது.
இந்த நிலையில், லைகா குழுமம், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரு நிறுவனங்களும், அமரா் கல்கியின் புகழையும், அவரது சேவைகளையும், பாரம்பரியத்தையும் போற்றும் வகையில் இயங்கி வரும் அமரா் கல்கி கிருஷ்ணமூா்த்தி அறக்கட்டளையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க முன்வந்தனா்.
மேலும், அறக்கட்டளையின் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் லைகா குழுமத் தலைவா் சுபாஸ்கரன், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மணிரத்னம் ஆகியோா் அமரா் கல்கி கிருஷ்ணமூா்த்தி அறக்கட்டளை அலுவலகத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்தனா்.
அங்கு கல்கி கிருஷ்ணமூா்த்தியின் மகன் கல்கி ராஜேந்திரன் முன்னிலையில், அறக்கட்டளையின் நிா்வாகத் தலைவா் சீதா ரவியிடம் 1 கோடியை நன்கொடையாக வழங்கினா்.
இந்த நன்கொடை அறக்கட்டளையின் மூலதன நிதி ஆதாரமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.