இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் எதிர்வரும் 9 ஆம் திகதி உருவாகும் புதிய வளியமுக்க தாழமுக்க நிலை காரணமாக தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தாழமுக்க மண்டலம் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து இந்த நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடும் மழைப்பொழிவு
வடகிழக்கு பருவ பெயர்ச்சி மழைக்காலம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே கடும் மழைப்பொழிவு இடம்பெற்றுவரும நிலையில், நேற்று பெய்த கடும்மழை காரணமாக 67 வதிவிடங்கள் சேதமடைந்து 29 கால்நடைகள் பலியாகியுள்ளன.
நல்வாய்ப்பாக மனித உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. எனினும் இதுவரை இந்தப் பருவமழை காலத்தில் மொத்தமாக 26 பேர் காலநிலை சீர்கேட்டினால் பலியாகியுள்ளனர்.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு பணியார்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கென மொத்தம் 43 கண்காணிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப் படை தயார் நிலை
அத்துடன் தேசிய பேரிடர் மீட்புப்படையும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.