சென்னை மாத்தூரில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் இன்று இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.
சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை விஷால் மணமக்களுக்கு வழங்கினார்.
அப்பொழுது பேசிய விஷால், 11 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்ததில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த 11 தங்கச்சிகளை மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு பட்டு வேட்டி, சட்டை கட்டுவது ரொம்ப பிடிக்கும். இதற்காக இந்த விழாவுக்கு நான் பட்டு சட்டையில் வந்துள்ளேன்.
படப்பிடிப்பு தளங்களில் எனக்கு பல்வேறு அடிகள் விழுந்தன. ஏதோ எனது மனதை பாதிக்கும் விதமாக சில சம்பவங்கள் நடைபெற்றன. எனக்கு மனதில் தோன்றியதை நான் உடனுக்குடன் செய்து விடுவேன். அது போல ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என எனது மனதில் தோன்றியது.
அதுபோல இன்று இந்த ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. ஏழைகளுக்கு செய்வது பெரும் பாக்கிய மாக கருதுகிறேன். இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன்.
இந்த இலவச திருமணங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்வேன். ஏழைகளின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. நடிகர் சங்க கட்டிடம் பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன. அந்த விழாவுக்கும் நீங்கள் எல்லோரும் வரவேண்டும். நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி.
நான் யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு மாணவியின் படிப்புக்காக கல்லூரியில் பிச்சை கேட்டு அந்த மாணவியை உயர்தர கல்வி பெற வைத்து உள்ளேன். தற்போது அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு விஷால் பேசினார்.
பின்னர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:- திரைத்துறையின் அப்துல் கலாம் நான் அல்ல, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டும் பணிகள் நிறைவு பெற்றபின் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். அந்த திருமணம் காதல் திருமணமாக இருக்கும்.
தாஜ்மஹாலை பார்த்தால் ஷாஜகானை தான் நாம் வியந்து பார்க்கிறோம். அதுபோல என்னுடைய காசி பயணம், அங்கு நான் பார்த்த விஷயங்களை என்னை வியக்க வைத்தது. அதனால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தேன். அதற்கு அவர் எனக்கு பதில் அளித்தது இன்னும் எனக்கு சந்தோஷமாக இருந்தது. இது அரசியல் கிடையாது. மனதார ஒரு விஷயத்தை, சாதாரண ஒரு குடிமகனாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதை பதிவு செய்தேன் பிரதமர் எனக்கு பதிலளித்தது மிகவும் சந்தோஷம். இவ்வாறு அவர் கூறினார்.