வீதி அபிவிருத்தி அதிகாரசபையின், நெடுஞ்சாலைகளை மேற்பார்வையிடும் திட்ட முகாமைத்துவ பிரிவின் இரண்டு உயரதிகாரிகள், இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
முன்மொழியப்பட்ட புதிய களனி பாலத்திலிருந்து அதுருகிரிய வரையிலான நெடுஞ்சாலை தொடர்பிலேயே இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ஆணைக்குழுவின் அடுத்த விசாரணையின்போது, மேலதிகமான ஆவணங்களை கொண்டு வருமாறு, குறித்த முகாமைத்துவப்பிரிவின் தலைவருக்கு ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏலத்தில், குறித்த நிர்மாணத்துக்கு தகுதிப்பெற்ற சைனா ஹார்பர் என்ஜினியரிங் கோர்ப்பரேஷன் லிமிடெட் (சிஎச்இசி) க்கு சாதகமாக, அசல் பொறியாளர்களின் மதிப்பீடு எவ்வாறு மாற்றப்பட்டது என்பது தொடர்பாக இதன்போது கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதேவேளை பிரதித் திட்டப் பணிப்பாளர் பி.டி.சூரியபண்டார, ஆணைக்குழுவினால் விசாரணைக்காக தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்தார். முன்னதாக குறி;த்த ஏலம் தொடர்பான பல கோப்புகளை ஆணைக்குழு, தம்வசப்படுத்தியுள்ளது.
குறித்த சீன நிறுவத்துடனான நேரடி உடன்படிக்கை மற்றும் சலுகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட நெடுஞ்சாலைகள் அமைச்சின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையை அமைக்க 2020 ஏப்ரலில் அமைச்சரவை முதலில் அனுமதி வழங்கியது. எனினும் சாலைக்கான கேள்விப்பத்திர முறை தொடர்பில் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏலப்போட்டியாளர்கள் ஏல முறைகேடு என்று குற்றம் சாட்டுகின்றனர்