தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கு வரும் வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரான சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநரிடம் கடிதம் கொடுத்து காத்திருந்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் நான்காண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி உத்தரவிட்டது.
எனவே, சசிகலா தனக்குப் பதில் கட்சிப் பதவிக்கும் ஆட்சிப்பொறுப்புக்கும் புதிய தலைவர்களை தேர்ந்தெடுத்ததுடன் சரண் அடைய கூடுதல் அவகாசம் கேட்டிருந்தார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சசிகலாவின் உடல் நலம் கருதி இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என வாய்மொழியாக கேட்கப்பட்டுள்ளது. ஆனால், சரண் அடைவதற்கு அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியதுடன், உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து சசிகலா சாலை மார்க்கமாக காரில் பெங்களூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.