குணதிலகாவை கைது விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார், குணதிலகாவை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ்கா குணதிலகா மீதான குற்றச்சட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிககை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளார். குணதிலகா நவம்பர் 7ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம், நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என இலங்கை கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குணதிலகா கைது செய்யப்பட்டதால் அவர் இல்லாமல இலங்கை அணி நாடு திரும்பியது.