பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற எல்லாம் அவளை மறக்கத்தான் என்ற வசனம் அனைவரையும் கவர்ந்தது.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் மணிரத்னம் படமாக எடுத்தார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது.
பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தேர்வு என்றும் தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்தனர். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் வரும் எல்லாம் அவளை மறக்கத்தான் என்று விக்ரம் பேசும் வசனத்தை ரசிகர்கள் பல மீம் டெம்ப்ளேட்டாக மாற்றி இணையத்தில் வைரலாக்கி வந்தனர். அந்த அளவிற்கு அந்த வசனம் அனைவரையும் கவர்ந்தது.
இந்நிலையில் நடிகர் விக்ரம், மழலை குழந்தை பொன்னியின் செல்வன் படத்தில் வரும் எல்லாம் அவளை மறக்கத்தான் என்ற வசனத்தை பேசும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மழலை ஆதித்த கரிகாலன்!! பின்றியே’பா!! என்று பதிவிட்டுள்ளார். இவர் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.