- ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.
- நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்றுடன் குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
முதல் அரையிறுதியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளும், 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 போட்டியை பொறுத்த வரையில், டாஸ் முக்கியத்துவம் பெறும். போட்டி இரவில் நடப்பதால் பனித்துளி ஆதிக்கம் செலுத்தும். இதனால், 2-வது பந்து வீசும் அணிக்கு பாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வென்றாலே கண்ணை மூடிக்கொண்டு கேப்டன்கள் பந்து வீச்சைதான் தேர்வு செய்வார்கள்.
இதற்கு உதாரணம் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக் கோப்பையை சொல்லலாம். டாஸ் வென்ற அணிகளே பெரும்பாலும் வெற்றி பெற்றன.
இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாஸ் தோற்றதுடன் போட்டியில் தோல்வியடைந்து தொடக்க சுற்றோடு வெளியேறியது.
தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதும் அடிலெய்டு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கொடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதற்கு முன் ஐந்து போட்டிகளில் முடிந்துள்ளன. இந்த 11 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தோல்வியை தழுவியுள்ளது.
நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து தோல்வியை தழுவியது.
இதனால் 10-ந்தேதி (வியாழக்கிழமை) மோதும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின்போது, அப்போதும் டாஸ் வென்றேயாக வேண்டும் என நினைக்கும் கேப்டன்கள், இந்த போட்டியில் டாஸ் வெல்லக் கூடாது என நினைக்கலாம்.
என்ன இருந்தாலும், அன்றைய தினம் யாருக்கு சிறந்த நாளாக அமைகிறதோ, அவர்களே வெற்றி வாகை சூடுவார்கள்.