தற்போதைய நிலையில் தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறிவருகிறது. எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.
உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விடயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம்.
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இப்பிரச்சனை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்சனை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்சனைகளை உருவாக்கும். தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வதைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்சனை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறைவதையோ தடுக்கலாம்.
உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்சனை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.
தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.