சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கீழ்நீதிமன்ற தீர்ப்பு முற்றிலும் உறுதி செய்யப்பட்டதால், ஜெயலலிதாவின் சொத்துக்களை மாநில அரசு பறிமுதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள 800 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட் மற்றும் பங்களாவை வருவாய் மீட்புச் சட்டத்தின்கீழ் மாநில அரசு தன்வசப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
கொடநாடு சொத்து மதிப்பு மட்டும் பல நூறு கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதை பறிமுதல் செய்து அரசின் தேவைக்குப் பயன்படுத்தவோ அல்லது ஏலம் மூலம் விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையை கருவூலத்தில் சேர்க்கவோ அரசுக்கு உரிமை உள்ளது.
1991 முதல் 1996 வரை இதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரால் பினாமி பெயர்களில் பதிவு செய்யப்பட்ட, வழக்கில் தொடர்புடைய மேலும் பல சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதுதவிர ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கு மொத்தம் 130 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அவற்றைச் செலுத்தத் தவறினால் வழக்கில் பறிமுதல் செய்ய உத்தரவிட்ட சொத்துக்கள் தவிர்த்து மீதமுள்ள சொத்துக்களை ஏலம் விட்டு அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.