பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார்.
பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் 12 சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கா னிஸ்தான் ஆகியவை வெளியேற்றப்பட்டன.
2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. சிட்னியில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து -குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.இதற்கு முன்பு கடந்த உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
அந்த அணி ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இங்கிலாந்திடம் 20 ரன்னில் தோல்வி அடைந் தது. ஆஸ்திரேலியா (89 ரன்), இலங்கை (65 ரன்), அயர்லாந்து (35ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆப்கானிஸ்தானுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்கு சன் (தலா 7 விக்கெட்) ஆகி யோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.
பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை 33 ரன்னிலும், நெதர்லாந்தை 6 விக்கெட்டிலும், வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயிடம் 1 ரன்னிலும் தோற்றது.
அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூதி, இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப்கான் (10 விக்கெட்), ஷகீன்சா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ந்தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இறுதிப் போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.