இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடக்கிறது.
இதில் ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா-பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.
வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் வலியால் துடித்தார். உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார்.
அவரது கையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. ஐஸ் கட்டியை தடவி அவருடன் காயம் குறித்து பயிற்சி குழுவை சேர்ந்த பேடி அப்டன் பேசிக் கொண்டு இருந்தார். ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும்.
இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.
ரோகித்சர்மா விளையாடாமல் போனால் மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.