- 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர்.
- குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன.
நெருங்கிய உறவு திருமணம்
ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு மற்றும் மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களால் கூறப்படுவது பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்கின்ற ஆண், பெண்களுக்கு எந்த ஒரு உடல், மன நல குறைபாடுகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களிடம் இருக்கிற தங்கள் மூதாதையர்களின் மரபணுக்களை தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கடத்துவதால், அந்த மூதாதையர்களுக்கு இருந்த உடல், மன நல குறைபாடுகள் இப்போது பிறக்கின்ற குழந்தைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு
பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துகள் தான் வயிற்றில் வளருகின்ற தங்களின் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சத்து இல்லாத, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் வகையிலான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அது கருவில் வளரும் குழந்தையின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ரத்த கொதிப்பு
அனைத்து மனிதர்களுக்கும் ரத்த அழுத்தம் அவர்களின் வயதிற்கு ஏற்ப இருக்கும். பெண்கள் கர்ப்பமடைந்த பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சராசரியான அளவிற்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதீத ரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதிலும், அந்த உணவில் இருக்கின்ற நச்சு தன்மைகளை அழித்து உடலுக்கு தேவையான சத்துகளை பிரித்து தரும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் நச்சு தன்மையால் பாதிக்கப்பட்டு, அழற்சி உண்டாகி மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் வயிற்றில் வளரும்குழந்தைகளை உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறக்க செய்து விடும் சூழல் ஏற்படுகிறது.
நீரிழிவு நோய்
ஒரு காலத்தில் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நோயாக இருந்த நீரிழிவு நோய், தற்காலத்தில் அனைத்து வயதினர் மற்றும் பாலினத்தவர்களை பாதிக்கிறது. அதிலும் கர்ப்ப காலத்தில் இந்த நீரிழிவு பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள் மிகுந்த உடல் நல பிரச்சனைகளை சந்திப்பதோடு, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் குறைபாடு கொண்டதாக பிறக்கின்ற ஆபத்தை அதிகப்படுத்துகிறது.
குறைப்பிரசவம்
ஒரு தாயின் வயிற்றில் 10 மாத காலம் இருந்து பின்பு பிறக்கின்ற குழந்தை உடல் ரீதியான முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்கும். இத்தகைய குழந்தை பிறப்பு ஒரு முழுமையான கர்ப்ப கால பிறப்பாக கருதப்படுகிறது. 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர். இப்படி குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்த குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிக்கிறது.
வயிற்றுக்குள் குழந்தை நிலை
10 மாத காலம் கருவில் குழந்தை சுமக்கும் பெண்கள், தங்கள் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிலையை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடலை கருக்கொடி சுற்றிக்கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்றவை குழந்தை உடற்குறைபாடு கொண்டு பிறக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
பிரசவ காலம்
10 மாத காலம் கழிந்ததும் பிரசவ வலி எடுத்து, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வெளியே வருவது, பிரசவ காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் எலும்பு முறிவு போன்ற காரணங்கள் குழந்தை ஊனமாக பிறக்கின்ற நிலையை உண்டாக்குகிறது.
மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்ப்பதன் மூலமும், பேறு காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதன் மூலமும் குழந்தை உடல் மன நல குறைபாடுகள் இல்லாமல் பிறக்க செய்ய முடியும்.