பள்ளி மாற்று சான்றிதழ் உள்பட அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நடிகர் தனுஷ்க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷை அவர்களது மகன் என்றும், தங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்கக்கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் ஆஜராகுமாறு நீதிமன்றம் தனுஷ்க்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தனுஷ் சார்பில், மேலூர் நீதின்றத்தில் வழக்கு நடப்பதால், எனது தொழில் பாதிக்கும் என்றும் நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் சிரமம் இருக்கிறது.
எனவே மேலூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையில் நான் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து, ரத்து செய்யவேண்டும் என்று மனு அளித்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது, தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனுஷ் சென்னையில் உள்ள பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்ததற்கான பள்ளி மாற்றுச்சான்றிதழ் (டிசி) மற்றும் வருகை பதிவேட்டின் நகலை தாக்கல் செய்தார்.
இதேபோல் கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, மேலூர் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்ததற்கான மாற்றுச் சான்றிதழ் நகலை தாக்கல் செய்தார்.
இரண்டையும் வாங்கிப் பார்த்த நீதிபதி, இருவர் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் அசலை தாக்கல் செய்யுமாறு கூறினார்.
அப்போது இருதரப்பிலும் நகல் ஆவணம் மட்டுமே தற்போது உள்ளது என கூறப்பட்டது.
இதையடுத்து இருதரப்பிலும் பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.