மெல்போர்னில் இருந்து அரையிறுதியில் பங்கேற்க இந்திய அணி விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.
அடிலெய்டில் நவம்பர் 10-ம் தேதி 2-வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி அடிலெய்டில் நாளை நடைபெறும் 2-வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை மெல்போர்னில் விளையாடி விட்டு, அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்காக விமானத்தில் அடிலெய்டு வந்தனர்.
ஐ.சி.சி.யின் விதிப்படி ஒவ்வொரு அணியிலிருந்து 4 வீரர்களுக்கு மட்டுமே நவீன வசதிதளை உடைய வணிக வகுப்பு இருக்கைகள் (பிசினஸ் கிளாஸ் சீட்) வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய அணியில் கோலி, ரோகித், ராகுல் டிராவிட் ஆகியோருக்கு பிசினஸ் வகுப்பு இருக்கைகள் வழங்கப்பட்டது. ஆனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ஓய்வு தேவை என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் ஆகியோர் தங்களது பிசினஸ் விகுப்பு இருக்கையை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.
மெல்போர்னில் இருந்து அடிலெய்டுக்கு விமான பயண நேரம் 1 மணி 20 நிமிடங்கள் ஆகும். இந்தப் பயண நேரத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களின் கால் மற்றும் முதுகில் வலியை எதிர்கொள்ள நேரிடலாம். இதனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பிசினஸ் கிளாஸ் சீட்களை கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு போட்டிக்கு முன்பு சரியான ஓய்வு கிடைக்கும்.
இதுதொடர்பாக இந்திய அணியின் துணை ஊழியர் ஒருவர் பேசுகையில், போட்டிக்கு முன் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல ஓய்வு வேண்டும். அவர்கள் கால்களை நீட்ட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம் என கூறினார்.
டிராவிட், ரோகித் சர்மா மற்றும் கோலியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.