சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக ‘மல்லிப்பூ’ பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் சிம்பு பேசியதாவது, “ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல வேண்டும். படம் பண்ணிட்டு இருக்கும் போது பல அப்டேட் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், படக்குழு ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அதிக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது ஒரு தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலை.
எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால் தான் நல்ல படங்கள் வரும் அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் கதாநாயகர்களை தூக்கி மேலே வைப்பார்கள். நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் ரொம்ப தொந்தரவு செய்யாதீர்கள் உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லாம் உழைத்து கொண்டிருக்கிறோம். இது என்னுடைய ‘பத்து தல’ இயக்குனர் சொல்ல சொன்னார். அதனால் தான் கூறினேன்” என்று பேசினார்.