- நீந்தும் போது உடலின் எல்லா தசைகளும் வேலை செய்கிறது.
- அரை மணி நேர நடைப்பயிற்சி 200 கலோரிகளை எரிக்கும்.
உங்களுக்கு நீந்த தெரியுமா…? இல்லை, என்றால் வெகுவிரைவாகவே நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நீச்சல் பயிற்சி மூலம் மாநில, தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்கலாம். அதேசமயம், உங்களது உடலையும் ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
சரி…! நீச்சல் பயிற்சி மூலம் எத்தகைய ஆரோக்கிய நலன்கள் கிடைக்கின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.
அரை மணி நேர நடைப்பயிற்சி 200 கலோரிகளை எரிக்கும். அரை மணி நேர சைக்கிள் பயிற்சி 150 கலோரிகளை எரிக்கும். ஆனால் அரை மணி நேர நீச்சல் பயிற்சியினால் 350-க்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படுகின்றன. நடைப்பயிற்சியின் போதும், ஜாகிங் செய்யும் போதும் உடலின் கீழ் பகுதி தான் வேலை செய்கிறது. நீந்தும் போது உடலின் எல்லா தசைகளும் வேலை செய்கிறது. கை-கால் மற்றும் தொடைப் பகுதியில் உள்ள தசைகள் வலிமை அடைகிறது. இதயம் மற்றும் நுரையீரல் நன்கு வேலை செய்ய வைக்கிறது.
உடலில் கொழுப்பு மற்றும் ரத்த அழுத்த அளவை நீச்சல் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, தன்னம்பிக்கையை அதிகரிப்பதில் நீச்சல் பயிற்சியின் பங்கு அதிகம். நீச்சல் உடல் பருமனை விரட்டும். நுரையீரலுக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும்.
காற்றை விட நீர் அடர்த்தியானது என்பதால் தரையில் உடற்பயிற்சி செய்வதை விடவும் 44 மடங்கு அதிகம் தசை இறுகும். நரம்பு மண்டலம் சீராகும். நன்கு பசி எடுக்கும். நல்ல தூக்கம் வரும். மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் நீச்சலை அனைவரும் கற்றுக் கொள்வது நல்லது.
காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது. நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.