ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை துவங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் படிப்படியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பெங்களூரு மற்றும் ஐதராபாத் நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக தசரா பண்டிகை காலத்தில் நாட்டின் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவைகளின் பீட்டா வெளியீடு நடைபெற்று வந்தது.
பீட்டா சோதனை மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் வெளியிடப்பட்டது. பின்னர் தீராவளி சமயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாத்வாராவில் ஜியோ 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டன. எனினும், ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த “ஜியோ வெல்கம் ஆஃபர்”-க்கான இன்வைட் பெற காத்திருக்க வேண்டும். இவ்வாறு இன்வைட் செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் 1Gbps வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்தலாம்.
முந்தைய அறிவிப்புகளை போன்றே இம்முறையும், வெளியீட்டுக்கு எந்த விதமான கட்டணங்களும் கூடுதலாக வசூலிக்கப்படவில்லை. “ஜியோ ட்ரூ 5ஜி சேவை இந்த இரு தொழில்நுட்ப நகரங்களில், இந்தியர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, மனித குலத்திற்கு சில அதிநவீன தொழில்நுட்பங்களின் உண்மை திறனை உணர செய்யும்.” என ஜியோ வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ட்ரூ 5ஜி சேவைகளின் வெளியீடு இந்தியாவில் படிப்படியாக நடைபெறும் என ஜியோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. தற்போது ஜியோ ட்ரூ 5ஜி சேவையில் பயனர்கள் 500 Mbps முதல் அதிகபட்சம் 1 Gbps வேகத்தில் இணைய சேவைகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து உள்ளது.