- வெளிநாட்டு லீக் தொடர்களில் இந்திய வீரர்கள் விளையாட முடியாது.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அனுமதி அளிப்பதில்லை.
டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்வி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இந்திய வீரர்களையும் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதித்தால் ஐசிசி நடத்தும் தொடர்களில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பல்வேறு நாடுகளிலும் லீக் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்காளதேசம், பாகிஸ்தான், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன.
இந்த தொடர்களில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிப்பதில்லை.
மற்ற நாடுகளின் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் விளையாடுவதால் கிடைக்கும் அனுபவம் அவர்களுக்கு அந்தந்த நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட உதவுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது:
வெளிநாட்டு டி20 லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிக்க பிசிசிஐ பரிசீலினை செய்து பார்க்கலாம். உலகம் முழுவதும் விளையாடும் வீரர்கள் பலர், இது போன்ற பல உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் மிகவும் முக்கியமான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்காக இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் விளையாடி உள்ளார். பட்லரும் 2013 முதல் பி.பி.எல்.லில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்காக விளையாடி உள்ளார். இந்த அனுபவம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளில் அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக விளையாட அங்குள்ள மைதானங்கள், கால நிலை, பிட்ச் தன்மை உள்ளிட்டவற்றில் அனுபவம் கிடைக்க கரீபியன் பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்கள் விளையாடினால் அது சிறந்ததாக அமையும். இந்த அனுபவம் நிச்சயம் அங்கு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.