‘அரண்மனை’ 2ஆம் பாகத்தை இயக்கி, நடித்த சுந்தர்.சி, அதன்பிறகு ‘முத்தின கத்திரிகா’ படத்தில் நாயகனாக மட்டும் நடித்தார். தற்போது ‘நந்தினி’ மெகாத் தொடரை தயாரித்து வழங்கி வருகிறார்.
அவரின் அடுத்த படம் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’. 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகவிருப்பதாகக் கூறப்படும் இந்த வரலாற்றுப் படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நாயகர்களாக நடிக்கிறார்கள் எனவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் எனவும் ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பான ‘சங்கமித்ரா’ கேரக்டரில் நடிப்பதற்கான நாயகி வேட்டை கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது.
தற்போது அந்த கேரக்டரில் நடிப்பதற்காக நடிகை ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்ட ஃபேன்டஸி படமான ‘புலி’யிலும் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.