அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த விடுதி அமைந்துள்ள பகுதி பரபரப்பின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா பிடியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க புறப்பட்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியினால் கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை அமுல்படுத்தப்பட்ட இந்த தடை உத்தரவு இன்று 2வது நாளாக நீடிக்கிறது. அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது.