- குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.
ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.
மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.