ஐ மேக்கப் :
உடல் மற்றும் உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி கண்கள்…உடல் நலமின்மையையும் சரி, உள்ளம் சரியில்லாததையும் சரி… கண்கள் எதிராளிக்குக் காட்டிக் கொடுத்து விடும். அதே போல ஒருவர் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ள அதிகம் பிரயத்தனப் பட வேண்டாம். கண்களுக்கு மை தீட்டி, மெலிதாக ஒரு கோடு ஐ லைனர் வைத்து, மஸ்காரா தடவினால் போதும். அகன்று விரிந்த அந்தக் கண்கள் ஆளையே மாற்றும்.
தவறான ஐ மேக்கப், இருக்கும் அழகையும் கெடுக்கக் கூடியது. மை வைப்பதில் தொடங்கி, மஸ்காரா பூசுவது வரை கண்களுக்கான அழகு சாதனங்கள் பற்றியும் அவற்றின் உபயோகம் பற்றிய அறிமுகம் இது…
கன்சீலர் :
கண்களுக்கடியில் கருவளையங்கள் என்பவை இன்று அனேகமாக எல்லோரும் சந்திக்கிற பிரச்சனையாக இருக்கிறது. வாழ்க்கை முறை, தூக்கமின்மை, கம்ப்யூட்டர் மற்றும் டி.வி.யின் முன் நீண்ட நேரம் இருப்பது, சத்துக்குறைபாடு என இதற்குப் பல காரணங்கள்… இப்படிக் கருவளையங்கள் ஏற்படுகிற போது, அந்தப் பகுதி மட்டும் முகத்தின் சருமத்தோடு ஒட்டாமல் தனித்து தெரியும்.
கண்களுக்கடியில் உள்ள கருமையைப் போக்க கன்சீலர் உபயோகிக்கும் போது, ஒட்டுமொத்த சரும நிறமும் ஒரே மாதிரி மாறும். கன்சீலர் உபயோகித்த பிறகு கண்களுக்கான மேக்கப்பை ஆரம்பித்தால், கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். கன்சீலர் உபயோகிக்கும் போது கண்களின் ஓரங்களில் தடவ வசதியாக கார்னர் ஸ்பாஞ்ச் என்பதை உபயோகித்தால்தான் கன்சீலர் சீராகப் பரவும். கன்சீலர் தடவிய பிறகு டிரான்ஸ்லூசன்ட் பவுடர் உபயோகிக்க வேண்டும்.
ஐப்ரோ பென்சில் :
கண்களின் அழகை எடுத்துக் காட்டுவதில் புருவங்களுக்கு முக்கிய பங்குண்டு. புருவங்கள் சரியான ஷேப்பில் திருத்தப்பட்ட பிறகே கண்களுக்கான மேக்கப்பை தொடங்க வேண்டும். கண்கள் மற்றும் புருவங்களுக்கு சரியான வடிவத்தைக் கொடுக்கக் கூடியது இந்த பென்சில். ஐ பென்சிலில் டார்க் பிரவுன் மற்றும் கருப்பு என 2 ஷேடுகள் முக்கியமானவை. இது பவுடர் மற்றும் க்ரீம் வடிவில் கிடைக்கிறது. வேலைக்குச் செல்பவர்கள் ஹேண்ட் பேக்கில் வைத்து உபயோகிக்க எளிதான பென்சில்களாக கிடைக்கின்றன. டார்க் பிரவுன் ஷேடு உபயோகித்தால் மிக இயல்பான தோற்றம் கிடைக்கும்.
ஐ ஷேடோ :
கண்களின் மேல் புறத்தில் ஐ ஷேடோ தடவிக் கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. உடைக்கு மேட்ச்சாக ஐ ஷேடோ தடவிக் கொள்ளும் போது கண்களின் அழகும் பிரகாசமும் பல மடங்கு அதிகரிக்கும்.
ஐ ஷேடோ தடவுவது என்பது ஒரு கலை. அது சரியாக கை வந்துவிட்டாலே, ஐ மேக்கப்பில் பாதி முடிந்த மாதிரிதான். ஐ ஷேடோ தடவுவதற்கு முன் ஒருவரது கண்களின் வடிவத்தைப் பார்க்க வேண்டும். ஒவ்வொருவரின் கண்களும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். அதற்கேற்பதான் ஐ ஷேடோவை தேர்ந்தெடுக்க வேண்டும்.
மெரூன் மற்றும் கோல்ட் கலந்த காம்பினேஷன் நம் பெண்களுக்கு பொருத்தமானது. சிலர் சில்வர் மற்றும் நீலம் கலந்த காம்பினேஷன் உபயோகிப்பார்கள். ஐ ஷேடோ உபயோகிக்கும் போது ரொம்பவும் அதிகமாக போடக் கூடாது. மிதமாக உபயோகித்தால்தான் அழகு. ஐ ஷேடோ உபயோகிக்கிற கலை பழகப் பழகத்தான் கைவரும்.