அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தொடர்ந்தும் சிறைச்சாலையில் வைக்க சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக வசந்த முதலிகேவின் சகோதரர் அநுர முதலிகே தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேயை நீதிமன்றத்தின் உத்தரவினை தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என தீர்ப்பளித்து, அவரை தடுத்து வைத்துள்ள உத்தரவை ரத்து செய்து அறிவிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை, பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், அதனை விசாரணைக்கு ஏற்று, இடைக்கால நிவாரணமாக இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
வசந்த முதலிகேவிற்கு கடும் பாதுகாப்பு
இதன்போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், கடும் பாதுகாப்புக்கு மத்தியில், வசந்த முதலிகேயின் உடலினை மறைத்து போர்வை ஒன்றினால் போர்த்தி மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, வசந்த முதலிகேவை மீண்டும் 18 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நீதிவான் உத்தரவிட்டுள்ள நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் அவரை மீள தங்காலை தடுப்பு முகாமுக்கே அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் வசந்த முதலிகேயை தொடர்ந்தும் சிறைச்சாலையில் வைக்க சதித்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக வசந்த முதலிகே தன்னிடம் தெரிவித்ததாக அவரின் சகோதரர் அநுர முதலிகே ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் மீது வேறு வழக்குகளில் தொடர்ரப்பட்டுள்ளதால், எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
தெளிவாக இது உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவை மீறி அவரை, மோசடியான முறையில் புறக்கணித்து மீண்டும் சிறையில் அடைப்பதற்கு அவர்கள் திட்டமிடுகின்றனர் என்ற விடயத்தை நாம் மன்றுக்கு சுட்டிக்காட்டினோம் என்றும் தெரிவித்துள்ளார்.