பொல்லார்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார் ரோகித் சர்மா.
இருவரும் இணைந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தார் பும்ரா.
வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிரன் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான அவரது ஆட்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்தது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பொல்லார்டுடன் இணைந்த ஒரு படத்தை தமது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, அவர் உண்மையான லெஜண்ட் என்று குறிப்பிட்டுள்ளார். பெரிய மனிதர், பெரிய தாக்கம், எப்போதும் இதயபூர்வமாக விளையாடினார் என்று ரோகித் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பொல்லார்ட் ஒரு போதும் விடைபெற முடியாது, மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள், உங்களின் இருப்பு அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பொல்லார்ட் உடன் விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,எங்களுடன் களத்தில் இல்லாதது உங்களுக்குப் பழகிவிடும், ஆனால் வலை பயிற்சியின் போது எங்கள் கேலிகளை நான் இன்னும் ரசிக்கிறேன். புதிய இன்னிங்ஸ் மற்றும் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.