- நவம்பர் 17-தேதியை குறைபிரசவ விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மனிதர்களின் பிறப்பு என்பது பெண்களின் கருப்பையிலிருந்து வெளிப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் கருக்காலம் என்பது வேறுபடும். மனிதர்களில் கருத்தறித்தலுக்கு பின் 10 மாதங்கள் அல்லது 37 வாரங்கள் ஆகும் போதே கருவானது முழுமையான வளர்ச்சி அடைகிறது. இதன் பின்னரே பிரசவம் என்பது நிகழ்கிறது.
ஒரு குழந்தை முழுமையான வளர்ச்சியடைய குறைந்தது 34 முதல் 37 வாரங்கள் வரை ஆகிறது. இதற்கு முந்தைய கால இடைவெளிகளில் பிரசவம் நிகழும் போது குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. இவ்வாறு கருக்காலம் நிறைவுறும் முன்னர் பிரசவம் ஏற்படுகின்ற நிகழ்வே குறைபிரசவம் ஆகும். குறைபிரசவத்தினால் பிறக்கும் குழந்தைகளின் உள் உறுப்புகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய பெற்றோர் அமைப்புகள் குறைபிரசவத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க நவம்பர் 17-தேதியை குறைபிரசவ விழிப்புணர்வு தினமாக கடந்த 2008-ம் ஆண்டு ஏற்படுத்தியது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு முதல் நவம்பர் 17-ந் தேதி உலக குறைப்பிரசவ விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகளவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பிற்கு முக்கிய காரணமாக குறைப்பிரசவம் அமைகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 15 மில்லியன் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் கருக்காலத்தின் இறுதியில் விருத்தியடையும் உறுப்பான நுரையீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. குறைபிரசவக் குழந்தைகள் பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடனேயே உயிர் வாழ்கின்றன.
கருவில் ஒரு குழந்தைக்கும் மேல் உருவாகுதல், செயற்கைக் கருத்தரிப்பு, கர்ப்பிணிக்கு கர்ப்பகால ரத்த சோகை, கர்ப்பகால சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்ப காலத்தில் அடிக்கடி தொற்று நோய் ஏற்படுதல் ஆகியவை குறைபிரசவத்திற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. 1990-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை குறை பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்துள்ளன.
1990-ம் ஆண்டில் 1.57 மில்லியன் குழந்தை இறந்துள்ளதாகவும், 2015-ம் ஆண்டில் இது 0.81 மில்லியனாகக் குறைந்ததுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு குழந்தை பிறக்கும் முன்னரே உருவாகும் பல்வேறு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பை நிகழ்த்தும் குறைபிரசவம் பற்றி நாம் அறிந்து கொள்வதோடு, அனைவரிடத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாளில் இருந்து உறுதிபட செயல்படுவோம்.