கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொட, பொல்வத்தையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்வவம் இன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான உரகஹா இந்திக்கவின் ஆதரவாளர்களே இவ்வாறு பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாரிய குற்ற செயல்களுக்கு தொடர்புடைய உரகஹ இந்திக்கவின் ஆதரவாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் இலக்கம் 01, கொழும்பு வீதி, பொல்வத்தை, மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 24ஆம் திகதி அன்று உரகஹ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றவரும் மற்றும் கடந்த மாதம் 19ஆம் திகதி யக்கலமுல்ல பொலிஸ் பிரிவில் 04 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் கைது செய்யப்பட்ட போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் போத்தல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் T-56 ரக துப்பாக்கி, 12 போர் தோட்டா துப்பாக்கி ஒன்றும் ரம்போ ரக கத்தி ஒன்றும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.