நோய்த்தொற்றுகள் காரணமாகவும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும்.
கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
சிலரது கண்கள் திடீரென சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். பொதுவாக தூக்கமின்மை, உடல் சோர்வு காரணமாக கண்களின் நிறத்தில் மாற்றம் தென்படும். எனினும் ஓரிரு நாட்களில் கண்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். சில சமயங்களில் நோய்த்தொற்றுகள் காரணமாகவும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். கண்களில் எரிச்சல், காயம், நீர் வழிதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. கண்கள் சிவப்பு நிறத்தில் காட்சி அளிப்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
கொரோனா தொற்று
நுரையீரல் மற்றும் சுவாசக்குழாயில் தொற்று ஏற்பட்டால், அதன் பாதிப்பு இதயம் மற்றும் கண்களிலும் வெளிப்படும். மருத்துவர்களின் கருத்துப்படி கண்கள் சிவப்பு நிறத்தில் தொடர்ந்து காட்சி அளித்தால் அது கொரோனா அறிகுறியாகவும் இருக்கலாம். வைரஸ் கண்கள் வழியாக உடலுக்குள் நுழையும்போது இது நிகழும்.
காண்டாக்ட் லென்ஸ்
காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவது பிரச்சினை அல்ல. அதனை முறையாக உபயோகிக்க வேண்டும். சரியாக சுத்தம் செய்யாமலோ, சரியான முறையில் கண்களுக்குள் பொருத்தாமலோ இருந்தால் கண்களுக்கு அசவுகரியம் உண்டாகும். தூங்க செல்வதற்கு முன்பு காண்டாக்ட் லென்ஸை மறக்காமல் அகற்ற வேண்டும்.
அவற்றை வெளியே எடுக்காமல் அப்படியே தூங்குவது, காண்டாக்ட் லென்ஸ் அணிந்தபடியே மழையில் நனைவது கண்களில் தொற்று ஏற்பட காரணமாகிவிடும். கண்களில் காயம், கண் சிவத்தல் போன்ற பிரச்சினைகளையும் உண்டாக்கும்.
பிளேபரிடிஸ்:
இது பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படுகிறது. இந்த நோய்த்தொற்றுக்கு ஆளாகும்போது கண் இமைகளின் அடிப்பகுதி வீக்கமடையக்கூடும். கண்களும் சிவப்பு நிறமாக மாறும். காலாவதியான அழகு சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கண்களில் தொற்று ஏற்படக்கூடும்.
ஒவ்வாமை:
காய்ச்சல் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் கண்களின் நிறம் மாறக்கூடும். தூசுகள், விலங்குகளின் முடிகள் கண்களில் பட்டாலும் ஒவ்வாமை காரணமாக எதிர்வினை புரியும்.
நோய்த்தொற்று
கண்களில் வீக்கம் மற்றும் பாக்டீரியா போன்ற வைரஸ் தொற்றுகள் காரணமாக கண்களில் இருந்து நீர் வெளியேறும். மஞ்சள் நிறத்திலும் காணப்படும். கண் மருத்துவரை அணுகி பரிசோதிப்பதன் மூலம் நோய்த்தொற்றுகளில் இருந்து கண்களை பாதுகாக்கலாம்.