ஓமான் மற்றும் அபுதாபிக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அபுதாபியில் இருந்து வந்த குறித்த நபர் நேற்றிரவு விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் 12 பெண்களை அபுதாபிக்கு அழைத்துச் சென்று எல்லை வழியாக ஓமன் நாட்டுக்கு அனுப்ப முயற்சித்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முறைப்பாடு செய்திருந்தது.
12 பெண்கள் மாயம்
இந்நிலையில், குறித்த 12 பெண்களையும் அவர் எந்த நாட்டுக்கு அனுப்பினார் என்பது தொடர்பில் இதுவரை தகவல் வெளியாகவில்லை.
மருதானை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த 44 வயதுடைய சந்தேகநபரே விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கட்டுநாயக்க 18 அஞ்சல் பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஏஜென்சி உரிமம் காலாவதியான நிலையிலும் பெண்களை சுற்றுலா விசாவில் ஓமன் நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது பெண்கள் பாலியல் நடவடிக்கைகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டு உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் சில காலமாக எல்லைச் சட்டத்தை மீறி ஓமானுக்கு சுற்றுலா விசாவில் வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் அனுப்பப்படும் இலங்கைப் பெண்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை
இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபருடன் இலங்கை வந்த 19 இலங்கை பெண்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வந்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபரிடம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நான் 20 பெண்களை அழைத்து வந்துள்ளேன். அவர்களிடமே கேளுங்கள். அவர்கள் உண்மையைச் சொல்வார்கள். அவர்கள் வீடுகளுக்கு போகவில்லை..என்னைக் காப்பாற்றுங்கள்..நான் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடமே கேளுங்கள். நான் சொல்வதை விட அவர்கள் கூறுவதுதான் சரி எனவும் தெரிவித்துள்ளார்.