கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் படம் ‘விஜயானந்த்’.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ட்ரங்க்’ எனும் ஹாரர் திரில்லர் படத்தை இயக்கிய இயக்குனர் ரிஷிகா சர்மா இயக்கத்தில் தற்போது தயாராகி இருக்கும் படம் ‘விஜயானந்த்’. கர்நாடகத்தை சார்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தில் ‘ட்ரங்க்’ படப் புகழ் நடிகர் நிஹால் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் ஆனந்த் நாக், பாரத் பொப்பன்னா, ஸ்ரீ பிரகலாத், நடிகை வினயா பிரசாத், பிரகாஷ் பெலவாடி, வி.ரவிச்சந்திரன், அனீஷ் குருவில்லா, ரமேஷ் பட், தயாள் பத்மநாபன், ஷைனி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கீர்த்தன் பூஜாரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் பதிப்பு வசனத்தையும், பாடல்களையும் பாடலாசிரியர் மதுரகவி எழுதியிருக்கிறார். சுயசரிதை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி.ஆர்.எல்.பிலிம் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டிரைலரில் சாதிக்காம செத்துப்போய்ட்டா அது சாவுக்கே அவமானம் போன்ற வசனங்கள் இடம்பெற்று பலரையும் கவர்ந்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 09ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.