கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷகீலா.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் கவர்ச்சி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. மலையாள திரையுலகில் 1990-ம் ஆண்டுகளில் இவர் நடித்து வெளியான படங்கள், அப்போதைய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக ஓடி வசூலை அள்ளி குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் கவர்ச்சியாக நடித்து கலக்கியதால் இவரது படத்திற்கு செல்ல இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஷகீலா நடித்த படங்கள் திரைக்கு வர திரையுலகம் மறைமுக தடை விதித்தது. அதன்பின்பு நடிகை ஷகீலாவுக்கு பட வாய்ப்புகள் குறைய அவர் சினிமாவில் இருந்து சிறிது விலகியிருந்தார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரியாலிட்டி ஷோக்களில் தலைகாட்டி வந்தார். இதன் மூலம் நடிகை ஷகீலாவுக்கு மீண்டும் வரவேற்பு கிடைக்க அவரை மலையாள திரையுலகம் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு விடுத்தது.
அந்த வகையில் ஒமர் லூலுவின் நல்ல சமயம் என்ற மலையாள படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்க நடிகை ஷகீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவரும் விழாவில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். கோழிக்கோட்டிற்கு நடிகை ஷகீலா வருவதாக கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விழாவில் பங்கேற்கவும், நடிகை ஷகீலாவை காணவும் ஏராளமான ரசிகர்கள் வர இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கோழிக்கோட்டில் சினிமா அறிமுக விழா நடக்க இருந்த வணிக வளாகம் விழாவில் நடிகை ஷகீலா பங்கேற்க கூடாது என்று தடை விதித்தது. நடிகை ஷகீலா இல்லாமல் விழாவை நடத்தி கொள்ளுங்கள் என்று படக்குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஷகீலா இல்லாமல் விழா நடைபெறாது என படக்குழு முடிவெடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.
அதில் ஒமர் லூலு பேசியதாவது, நடிகை ஷகீலா இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வணிக வளாக நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என நாங்கள் முடிவு செய்தோம். எனவே சினிமா அறிமுக விழாவையே ரத்து செய்துவிட்டோம் என்றார்.
நடிகை ஷகீலா கூறியதாவது, சினிமா துறையில் இதுபோன்ற அவமானங்களை பலமுறை சந்தித்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இம்முறை கோழிக்கோடு நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தேன். எனது ரசிகர்களும் என்னை பார்க்க ஆர்வமாக இருந்தனர். நிகழ்ச்சிக்கு என்னை வரக்கூடாது என்று கூறியது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.