அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதில் உடன்பாடில்லாத போதும் குறுகிய காலம் மற்றும் அதிகளவான மேற்பார்வை அவசியமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வின் போது,பொறுப்புக்கூறல் விடயத்திற்காக அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கேட்கப் போவதாக கூறியுள்ள நிலையில், அந்த கால அவகாசம் வழங்குவது குறித்து முதலமைச்சரின் கருத்தினை ஊடகவியலாளர்கள் கேட்டிருந்தனர்.
2 வருட கால அவகாசம் கொடுத்தால் ஐ.நாவின் கண்காணிப்புடன் கொடுக்கப்பட வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இதுவரையில் ஐ.நாவின் கண்காணிப்பு இருக்கவில்லையா என ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசம் வழங்கினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் மறந்துவிடும்.
இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு ஒரு வருடகாலம் வழங்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் அரசாங்கத்தினால் குறிப்பிட்ட அளவு தான் செய்ய முடிந்துள்ளது.
தொடர்ந்தும் சிலகாலங்களை கொடுப்பதில் பிழை இருக்க முடியாது. கால அவகாசம் கொடுப்பது நன்மை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலஅவகாசம் வழங்கும் போது இவ்வளவு காலமும் எடுத்த நடவடிக்கைகளில் மக்களுக்கு எந்தளவிற்கு நன்மை கிடைத்துள்ளதென ஆராய்ந்து பார்த்து கால அவகாசத்தை வழங்க முடியும்.
அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை மாதாந்தம் அறிய கூடியவாறு ஏதாவது ஒரு செயற்திட்டத்தை வகுக்குமாறு கூறமுடியும்.
இதுவரையில் கொடுக்கப்பட்ட கால அவகாசங்களில் எந்தளவு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த செயற்பாடுகள் மக்களுக்கு நன்மை அளித்துள்ளனவா என ஐ.நா ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. குறுகிய காலமும், அதிகளவான மேற்பார்வையும் முக்கியமானது எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.