முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா சமஸ்டி முறையிலான ஆட்சியை விரும்புகின்றார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் சமஸ்டி முறையிலான ஆட்சி நடத்தப்பட வேண்டுமென கருணா விரும்புகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மாநிலங்களில் சமஸ்டி முறை ஆட்சி முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த மாநில ஆட்சிகளின் ஊடாக இலங்கை பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டுமென கருணா கூறியுள்ளார்.
சமஸ்டி ஆட்சி முறைக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் பிரச்சினைக்கு மிகவும் பொருத்தமான தீர்வுத் திட்டம் சமஸ்டி ஆட்சி முறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த காலத்தில் ஒஸ்லோவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது கருணா சமஸ்டி முறைமை குறித்து இணக்கப்பாட்டை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் மேடையில் ஏறி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக கருணா கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச தரப்பு சமஸ்டி முறை ஆட்சியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.