ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவுகள் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படும் “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைந்த செயல்பாடு- UNITE: Activism to end Violence against Women and Girls” என்பதாகும்.
கோவிட்-19 மற்றும் உலகப் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிக உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்துள்ளதாக குட்டெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பெண்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு, பாலியல் துன்புறுத்தல், உருவ துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் இணையவழி வன்முறைகளை பெண்கள் எதிர்கொள்வதை சுட்டிக்காட்டினார்.
குட்டெரெஸின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா புள்ளியியல் பிரிவு இணைந்து “நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம்: பாலின ஸ்னாப்ஷாட் 2022” என்ற தலைப்பில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறை
உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள் முழுவதும் வெவ்வேறு இலக்குகளில் முன்னேற்றத்தை இது மதிப்பிடுகிறது மற்றும் வீடுகளுக்குள் வன்முறை தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதை குறிப்பிடுகிறது.
15 முதல் 49 வயதுக்குட்பட்ட பத்தில் ஒருவர் 1 அவரது நெருக்கமான துணையால் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நான்கில் ஒரு பெண் வீட்டில் அடிக்கடி இதுபோன்று நடப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங்கள் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு குறைந்தது இரண்டு தசாப்தங்கள் ஆகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.