முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீடீரென சிங்கப்பூர் சென்ற இரகசியத்தை அரசாங்க புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மருத்துவ பரிசோதனைக்காக அவர் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு செல்வதாக கூறப்பட்டது. எனினும் குறித்த மருத்துவ பரிசோதனைக்கு முன்னர், சிங்கப்பூரின் பிரதான வங்கிக்கு சென்று பாரிய அளவிலான பண மாற்றல் செய்துள்ளதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, அங்கு மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளதாக கிடைத்துள்ள தகவல்களுக்கமைய இது தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேவும், முன்னாள் ஜனாதிபதியுடன் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபகச்வின் மகனான யோஷித ராஜபக்ச, லொஹான் ரத்வத்தேயின் மகளை திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்வெளி திட்டம் ஒன்றை திட்டமிட்ட ரோஹித ராஜபக்ச அதற்கான இரகசிய கணக்கினை சிங்கப்பூர் வங்கியிலேயே நடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மஹிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டில் இடம்பெறும் கூட்டு எதிர்கட்சியின் தலைவர்கள் கூட்டம் இம்முறை திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள நிலையில், தான் வெளிநாடிற்கு செல்லும் விடயத்தை கூட்டு எதிர்கட்சி தலைவர்களிடம் அந்த சந்தர்ப்பத்திலேயே மஹிந்த தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.