அவுஸ்திரேலியாவில் இருந்து 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான பகுதியில், கறவை பசுக்களை இறக்குமதி செய்வது தொடர்பான விடயத்தில் பாரிய மோசடி ஒப்பந்தம் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கோப் குழு கூட்டத்தில் புதன்கிழமை (24.11.2022) தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பசுக்கள் இறக்குமதி
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையால் நடத்தப்படும் பால் பண்ணைகளுக்காக 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான பகுதியில், அவுஸ்திரேலியாவில் இருந்து 5,000 கறவை பசுக்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை 37.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
எனினும் முறையான கொள்முதல் செயல்முறையைப் பின்பற்றாமல் அவுஸ்திரேலியாவின் வெல்லார்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கறவை பசுக்களில் பெரும்பாலானவை இலங்கையின் காலநிலைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இறந்துவிட்டன.
20,000 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய முடிவு
இதன் காரணமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது. இதன் பின்னர், 2018 இல் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டு அமைச்சு, மீண்டும் 20,000 கறவை பசுக்களை இறக்குமதி செய்ய முடிவு செய்தது.
இலங்கை, நெதர்லாந்தில் இருந்து 237 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றது, இதன் மூலம் 5,000 பசுக்களை இறக்குமதி செய்தது.
எனினும் இந்த பசுக்களில் பெரும்பாலானவை பசு வளர்போருக்கு வழங்கப்பட்ட பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்தன, அதே நேரத்தில் 5,000 பசுக்களுக்கு 11.9 மில்லியன் டொலர் முன்பணமாக வழங்கப்பட்டது.
எனினும் பசுக்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.