மிழக அரசியல் களம் உச்சகட்டமான பரபரப்பை எட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, கவர்னர் தரப்பிலிருந்து எந்த அழைப்பும் விடுக்காததால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை கவர்னருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். பின்னர் இரவு சுமார் 8 மணியளவில் அமைச்சர்களுடன் சென்று கவர்னரை சந்தித்தார்.
இதைதொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அவருடன் அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோரும் சென்றனர். இருதரப்பும் ஆளுநரை சந்தித்ததால், ஆளுநர் முக்கிய முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணிக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருக்கிறார். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பதற்காக கூவத்தூரில் இருந்து காலை 10.20 மணியளவில் புறப்பட்டார். அவருடன் திண்டுக்கல் சீனிவாசன், தினகரன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், கே.பி. அன்பழகன், சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் சென்றனர்.
காலை 11.30 மணியளவில் ஆளுநர் மாளிகையை வந்தடைந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குழுவினர், ஆளுநரை சந்தித்து பேசினர். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் முடிவில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.