ஈழத் தமிழர்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்புச் செய்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இப்போது நிலவுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பிக்கவுள்ளது.
2009ம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தொடர்பில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்தியிருந்தது.
வன்னி யுத்தம் தமிழின அழிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதான சான்றுகள் மனித உரிமை அமைப்புகளாலும் சர்வதேச மன்னிப்புச் சபையாலும் முன்வைக்கப்பட்டன.
இவை யாவற்றுக்கும் மேலாக சனல் – 4 ஊடகம் வன்னியில் நடந்த மனித வதையை மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தி வெளியிட்டது.
சுருங்கக்கூறின் சனல் – 4 வெளியிட்ட வன்னிப்போர் அவலங்கள் உலக நாடுகளை உலுக்கின.இலங்கையில் இப்படியெரு கொடுமையா? என்று சர்வதேச சமூகத்தை ஏங்க வைத்தது.
சனல் – 4 வெளியிட்ட ஆவணப்படங்கள் ஆதாரபூர்வமானவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்தன.
இது தொடர்பில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன் போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணையை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளும் கால அவகாசங்களும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டன.
இருந்தும் கால அவகாசத்தை கோருவதில் இலங்கையின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினரேயன்றி, ஜெனிவாக் கூட்டத்தொடரின் தீர்மானங்களை அமுல்படுத்துவதில் இம்மியும் கரிசனை கொண்டில.
இது ஒருபுறம் இருக்க, ஜெனிவாக் கூட்டத் தொடரில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தமிழர்களுக்கு எதிராகக் கதைப்பதிலும் செயற்படுவதிலும் கரிசனை காட்டிற்று.
இஃது எங்கள் மீதான சர்வதேச சமூகத்தின் கவனத்தை கலைப்புச் செய்தது. இந்நிலைமை யானது எங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதியும், நியாயமும், தீர்வும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் கருக்கலைந்து போகச்செய்யப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் வடக்கு மாகாணத்தின முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பங்கேற்று தமிழ் மக்களின் அவலத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இதைச் செய்வதற்கு முதலமைச்சருக்கு வடக்கு மாகாண அரசு எல்லையிடுவதாக இருக்கலாம் என்பதால், இன்று வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை கொண்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் என்ற அடிப்படையில் வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு வழங்கப்படும் கால அவகாசத்தை தவிர்க்குமாறும் ஈழத்தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யுமாறும் வலியுறுத்த வேண்டும்.