ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேக் மாடல்கள் உருவாக்கப்பட்டு வருவது சமீபத்தில் அம்பலமாகி இருக்கிறது.
புதிய ஆப்பிள் மேக் சாதனம் M2 மேக்ஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய அடுத்த தலைமுறை மேக் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய சாதனங்கள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என புளூம்பர்க் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருந்தார். புது மேக் மாடல்கள் வெளியீடு பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், இதுவரை ஆப்பிள் அறிவிக்காத M2 மேக்ஸ் பிராசஸர் கொண்ட புது மேக் மாடல் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீக்பென்ச் 5 டேட்டாபேசில் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மேக் மாடல் “Mac14.6” எனும் பெயர் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஆப்பிள் M2 மேக்ஸ் CPU கொண்டிருக்கும்.
பென்ச்மார்க்கிங் வலைதள விவரங்களின் படி M2 மேக்ஸ் பிராசஸரில் 12-கோர் CPU, 3.54GHz மற்றும் 96 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் சிங்கில் கோரில் 1853 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டில் 13 ஆயிரத்து 855 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. மேக்புக் ப்ரோ மாடலில் உள்ள M1 மேக்ஸ் பிராசஸரில் 10-கோர்கள், 3.2GHz டியூனிங்கில் இயங்குகின்றன. இவை சிங்கில் கோரில் 1746 புள்ளிகளையும், மல்டி கோர் டெஸ்டிங்கில் 12 ஆயிரத்து 154 புள்ளிகளை பெற்று இருக்கிறது.
அந்த வகையில் கீக்பென்ச் முடிவுகளின் படி புதிய M2 மேக்ஸ் பிராசஸர் அதன் முந்தைய வெர்ஷனை விட 14 சதவீதம் வேகமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. புதிய M2 மேக்ஸ் முந்தைய M1 மேக்ஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்த M2 சிப் புதிய மேக்புக் ஏர் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸரின் வேகம் மற்றும் செயல்திறன் அசாத்தியமாகவே உள்ளது.