நாட்டில் தற்போது மின்சார கட்டணத்தை அதிகரிப்பது நியாயமற்ற செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் நாட்டின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் இருப்பதையும் அது மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்பதையும் நாம் அறிவோம்.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதேவேளை எரிபொருள் மற்றும் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இப்போது மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால், இதனை மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
இலங்கை மின்சார சபை ஆகஸ்ட் 10 முதல் நவம்பர் 30 வரை 1 பில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாக பல ஊடக அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
அறிக்கைகள் சரியாக இருந்தால், மின் கட்டணத்தை அதிகரிக்க இது சரியான நேரம் அல்ல.
அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்
மேலும் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தற்போது நம் நாட்டில் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் நிலை காணப்படுகின்றது.
எனவே சுற்றுலாப் பயணிகள் வருகையின் போது தமது நேரத்தை செலவிட விரும்புகின்ற பிரதேசங்களில் மின்சாரம் தடைபடுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடமும் அமைச்சரிடமும் கோரிக்கை விடுத்திருந்தோம்.”என தெரிவித்துள்ளார்.