இலங்கையில் விளையாட்டுத்துறைக்கான முதலாவது பல்கலைக்கழகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க அறிவித்துள்ளார்.
மத்திய மாகாண இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கான விளையாட்டுப் பாடநெறி பயிற்சிகள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை அவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நடைபெற்றது
தம்புள்ளை, இனாமளுவை மைதானத்தில் நடைபெற்ற குறித்த வைபவத்தில் விளையாட்டுத்துறை ராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அங்கு உரையாற்றிய அமைச்சர் ரோஹண திசாநாயக்க,
இலங்கையில் முதலாவது விளையாட்டுத்துறை பல்கலைக்கழகம்
எதிர்வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதலாவது விளையாட்டுத் துறை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
தற்போது பல்லைக்கழகம் அமைப்பதற்கான இடம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. இளைஞர், யுவதிகள் வெறும் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கலாம் என்று முயற்சிப்பதை விடவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற தங்கள் பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும்.
விளையாட்டுத்துறைக்கான பல்கலைக்கழகத்தில் கற்று வெளியேறவுள்ள இளைஞர், யுவதிகள் நாளை இந்நாட்டின் விளையாட்டுத்துறை அதிகாரிகளாக, அமைச்சர்களாக வந்தால் அது நாட்டுக்கு பெரும் நன்மைகளை ஏற்படுத்தித் தரும் வாய்ப்பாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.