Loading...
தமிழக அரசியலில் நிலவி வந்த நீண்ட குழப்பத்திற்கு பின்னர், ஒரு முடிவு கிடைக்கும் விதமாக கவர்னர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு இன்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் கவர்னர் விதித்துள்ளார்.
ஆளுநரின் அழைப்பை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல்வராக பதவியேற்க்க இருக்கிறார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், தற்போது முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும், ஆட்சியும் செல்வதை நாங்கள் விரும்பவில்லை. அதை தடுத்து நிறுத்துவோம். ஜெயலலிதாவின் கனவான மக்கள் விரும்பும் ஆட்சி அமையும் வரையில் தர்ம யுத்தம் தொடரும்” என்றார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கிடையே, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் புதுடெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...