அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த நவம்பர் 15 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போதே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பெற்றோர் ஊடகங்களுக்கு பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உறவினர்கள் வெளியிட்ட தகவல்
தனது வீட்டில் பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக சந்தேகப்பட்ட ராஜ் துப்பாக்கியுடன் வீட்டின் வாசல் பகுதிக்கு வந்த நிலையில் திடீரென சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரியொருவர், ராஜின் கையில் இருந்த துப்பாக்கியை கீழே இறக்குமாறு உத்தரவிட்டு உடனே துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக ராஜின் உறவினர்கள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
ஆயுதத்தை நிலத்தில் போடுவதற்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்படுவதற்கு முன்னர் ராஜ் முனசிங்க மீது உடனடியாக பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டமை தொடர்பிலும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
குறித்த பகுதியில் சமீப காலமாக தொடர்ச்சியாக குற்ற சம்பவங்கள் இடம்பெற்றமையினால் ராஜ் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருந்ததாகவும், சகோதரர் கூறியுள்ளார்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
இதேவேளை, 911 என்ற எண்ணிற்கு ஒருவர் அழைப்பினை ஏற்படுத்தி துப்பாக்கியுடன் ஒருவர் தெருவில் நடந்துச்செல்வதாக வழங்கிய தகவலையடுத்தே சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், பொலிஸார் முன்னிலையிலேயே ராஜ் தனது வீட்டுக்குள்ளேயே துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
இதன்போதே ராஜ் முனசிங்க மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஒஸ்டின் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பான காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், தனது சகோதரர் ஒஸ்டின் பொலிஸ் அதிகாரியினால் “கொலை செய்யப்பட்டார்” எனவும் ராஜ் முனசிங்கவின் சகோதரர் ஜோஹான் முனசிங்க தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.