இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் இந்தியாவின் அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவின் கேரளம் மாநிலத்தில் உள்ள விளிஞ்சம் துறைமுக நிர்மாணப் பணிகளை அதானி நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
அதன் மூலம் மின்சக்தி, எரிவாயு விநியோகம் மட்டுமன்றி 23.5பில்லியன் ரூபா பெறுமதியான துறைமுக வழங்கல் நிலையமொன்றையும் அதானி நிறுவனம் பெற்றுக்கொள்ளவுள்ளது.
எனினும் விளிஞ்சம் துறைமுக நிர்மாணப் பணிகள் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
துறைமுக நிர்மாண பணிகள்
அவர்கள் துறைமுக நிர்மாணப் பணிகள் நடைபெறும் இடத்தில் கொட்டில்கள் அமைத்து தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் அவர்களை அங்கிருந்து அகற்றுவதுடன், எதிர்வரும் நாட்களில் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்வோரை மத்திய ரிசர்வ் படையின் உதவியுடன் அடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
கேரள விளிஞ்சம் துறைமுக நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர் இலங்கையில் அதானி நிறுவனம் கால் பதிக்கும் என்றும் முக்கிய துறைமுகங்களை தன் வசப்படுத்திக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.