- முதலில் ஆடிய இந்தியா 186 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, வங்காளதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்தியாவை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் தவறவிட்ட கேட்ச் இந்திய அணியின் தோல்விக்கு வழிவகுத்துள்ளது.
வங்காளதேச அணி 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இந்திய அணி வெற்றிபெற்றுவிடும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வீரராக களமிறங்கிய ரஹ்மானுடன் ஜோடி சேர்ந்த மெஹிடி ஹசன் மிர்சா அதிரடியாக ஆடினார். அவர் ரன்களை வேகமாக அடிக்க இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு நழுவிக்கொண்டே இருந்தது.
ஷர்துல் தாகூர் வீசிய 43-வது ஓவரின் 3-வது பந்தை ஹசன் மிர்சா விளாசினார். அது கேட்ச் நோக்கிச் சென்றது. அந்த பந்தை கேட்ச் பிடிக்க விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் வேகமாக ஓடிச்சென்றார். அவர் கேட்ச் பிடிக்க முயற்சித்தபோது பந்து அவரது கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது. கேட்ச் தவறவிட்டதை தொடர்ந்து, அதிரடியை தொடர்ந்த ஹசன் மிர்சா வங்காளதேசத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
ஹசன் மிர்சா – ரஹ்மான் ஜோடி கடைசி விக்கெட்டில் 51 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி மீதும், கேப்டன் ரோகித் சர்மா மீதும், கேட்சை தவறவிட்ட கே.எல்.ராகுல் மீதும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.