அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த பெண்னொருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரின் மிஷன் வேல்லி பகுதியில் உள்ள ரிவர்லீப் என்ற விருந்தகம் ஒன்றிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பெண் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததை நேரில் பார்த்த ஒருவரும் உறுதி செய்துள்ளதாக சாண்டியாகோ காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
கொள்ளை சம்பவம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரம் கடற்கரைகளுக்கு மிகவும் பிரபலமான நகரம். சுற்றுலா நகரமான இங்கு குற்றங்களுக்கும் குறைவில்லை. போதைப் பொருள் விற்பனை, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்கள் சாதாரணமாக நடைபெறும்.
இதனால் சாண்டியாகோ காவல்துறை கண்காணிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபடுவர். இந்நிலையில் மிஷன் வேல்லி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக சாண்டியாகோ காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் இருந்த போது வித்தியாசமான நடவடிக்கைகளுடன் சுற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை விசாரித்துள்ளனர்.
துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பு
சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் மகிழுந்தை சோதனையிட்டுள்ளனர்.மகிழுந்துக்குள் விடுதி அறைகளின் சாவி தயாரிக்க பயன்படும் கருவி, ஒரு ஆணின் காலணிகள் மற்றும் ஒரு துப்பாக்கி என வித்தியாசமான பொருட்கள் இருந்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையில் அந்தப் பெண் சாண்டியாகோவில் உள்ள மிஷன் வேல்லி பகுதியில் உள்ள ரிவர்லீப் என்ற விடுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது தெரியவந்தது.
அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விடுதியில் இருந்த சிசிடிவி மற்றும் கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட பெண் துப்பாக்கி முனையில் ஹோட்டல் ஊழியரிடம் இருந்து சாவி தயாரிக்கும் கருவி, அவருடைய ஷூக்கள் மற்றும் சிறிது பணம் இவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.
நேரில் பார்த்த ஒருவர்
அந்தப் பெண் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததை நேரில் பார்த்த ஒருவரும் உறுதி செய்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்
மேலும், பெண்ணின் பெயர் உள்ளிட்ட விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. இதே பெண் வேறு ஏதாவது கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.