தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது கடலில் இருந்து ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன. அப்படித்தான் ஆலகால விஷமும் கடலில் இருந்து வெளிப்பட்டது.
அந்த நஞ்சின் வீரியத்தைத் தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். கடலில் இருந்த உயிர்களும் கூட இறந்து போகும் நிலை உண்டானது. எனவே அனைவரும் சிவபெருமானை வேண்டினர். இதையடுத்து சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை, ஒரு பாத்திரத்தில் திரட்டி உட்கொண்டார்.
விஷம் ஈசனின் உடலில் பரவிவிடாமல் தடுப்பதற்காக, பார்வதிதேவியானவள் சிவபெருமானின் கழுத்தை தன் கைகளால் பிடித்துக் கொண்டாள். எனவே விஷம் சிவபெருமானின் தொண்டையிலேயே நின்று கொண்டது. இதன் காரணமாகவே சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார்.
இந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான், அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய, அதிசய காட்சியை காசியில் உள்ள அனுமன்காட் என்ற இடத்தில் வீற்றிருக்கும் காமகோடீஸ்வரர் கோவிலில் காணலாம். இதே போன்ற காட்சியை ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் காணமுடியும்.